-->

20.யார் அதிகமாய் அன்பு செலுத்துவார்கள்

Tuesday, February 1, 2005

யார் அதிகமாய் அன்பு செலுத்துவார்கள்

இது மனந்திருந்துதல் பற்றி கூறப்பட்ட உவமையாகும். இந்த உவமையை இயேசு சீமோன் என்ற பரிசேயர் வீட்டில் உண்பதற்காக சென்றிருந்தபோது கூறினார். இது சீமோனை பார்த்துக் கேட்ட கேள்வியாகும். இது வேதத்தில் லூக்கா 7:39-47 இல் காணப்படுகிறது.

சந்தர்ப்பம்
இயேவை சீமோன் என்ற பரிசேயர் தம்மோடு உண்பதற்கு வீட்டுக்கு அழைத்திருந்தார். இயேசுவும் அந்தப் பரிசேயருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார். அந்நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசேயருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்குத் தெரியவந்தது. உடனே அவர் நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார். இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின்றார் அவருடைய காலடிகளைத் தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு அக்காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். சீமோன் இதைக் கண்டு, “இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார் இவள் பாவியாயிற்றே” என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார். அவர் தமக்குள் சொல்லிக்கொள்வதை அறிந்த இயேசு சீமோனை நோக்கி கேள்வியாக ஒரு உவமையை கூறினார்.


உவமை

கடன் கொடுப்பவர் ஒருவிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன்பட்டிருந்தனர். கடனைத் தீர்க்க அவர்களால் முடியாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?

பின்னுரை
சீமோன் மறுமொழியாக, “அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என் நினைக்கிறேன்” என்றார். இயேசு அவரிடம், “நீர் சொன்னது சரியே” என்றார்.பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், “இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத்தார். நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை. இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடிகளை ஓயாமல் முத்தமிட்டுக் கொண்டே இருக்கிறார். நீர் எனது தலையில் எண்ணெய் பூசவில்லை. இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன் இவர் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்” என்றார்.


பொருள்

யாருக்கு அதிக‌ம் ம‌ன்னிக்க‌ப்ப‌டுகிற‌தோ அவ‌ர்க‌ளே அதிக‌மாய் அன்புகூறுவார்க‌ள்

நமது தளத்தின் புதிய பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலிலேயே படிக்க‌ இங்கே பதிவு செய்யவும்..

No comments:

Post a Comment